அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்றின் தரம் மாசடைவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், காற்று மாசு காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, டெல்லி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீத பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. இதே நடைமுறையை தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
டெல்லியில், ஹாட்ஸ்பாட்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்படும். டெல்லியில் மாசு எதிர்ப்பு கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதை கண்காணிக்க ஏற்கனவே ஆறு பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது என்று அவர் கூறினார்.