ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கடந்த மார்ச் 6-ந் தேதி, தமிழ் நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம், சில ஆலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தவிட்டுள்ளார். இதன்படி ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாடு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணிக்காக வேதாந்தா நிர்வாகத்தை மீண்டும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிப்பது ஆலைக்கு எதிராக போராடிய மக்களுக்கும், உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் அநீதியாகும். எனவே, கழிவுகளை அகற்றும் பணியை வல்லுனர்களின் கருத்துகளைப் பெற்று அரசே செய்துவிட்டு அதற்கான செலவுத் தொகையை ஸ்டெர்லைட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.