உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் செய்திக்குறிட்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி உலக தண்ணீர் தினமான 22.03.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும். குறை எண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android application) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் 22.03.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 31.03.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.