கிரீஸ் நாட்டில் இந்தியாவின் எச் ஏ பி ஃபார்மா மருந்து நிறுவனம் தயாரித்த 37.5 லட்சம் நர்விஜெசிக் வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை கடத்த பயன்படுத்தப்பட்ட இங்கிலாந்து படகு ஒன்றை பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர். கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் லாவரியோ துறைமுகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த வியாழன் அன்று இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியுள்ளனர். எகிப்து நாட்டை சேர்ந்த கடத்தல் கும்பலின் செயல்பாடு குறித்து உளவு அமைப்புக்கு தகவல் வந்ததால் அந்த துறைமுகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்ற படகு ஒன்றில் நர்விஜெசிக் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இவை சுமார் 3.15 டன் எடையுள்ளதாக இருந்தது. 500 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றி சென்ற இங்கிலாந்து படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது முடியும் வரை படகு மற்றும் அதன் பொருட்கள் அங்கேயே இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.














