அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜி சாட் என் 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் அதிக எடை கொண்டதால் இஸ்ரோ இதை செலுத்தவில்லை. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.
ஜி சாட் என் 2 செயற்கைக்கோள் சுமார் 4700 கிலோ எடை உள்ளது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இது பூமியின் சுற்றுவட்ட பாதையில், குறைந்தபட்சமாக 170 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 36000 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வருமாறு நிலைநிறுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்படும். அதன் பிறகு, இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட பெரும்பாலான இடங்களில் அதிவேக இணைய சேவை கிடைக்கும். வினாடிக்கு 48 ஜிபி வேகத்தில் இணைய சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.