ஜிஎஸ்டி வரி அடுக்குகள் எளிமைப்படுத்தப்பட்டு 28% வரி பல பொருட்களுக்கு 18% ஆக குறைக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளையே கொண்ட புதிய வரிமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
இதன் படி, வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி போன்ற மின்சாதனங்களுக்கு 28% வரியிலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 350 சிசி வரை மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், 1,200 சிசிக்குக் குறைவான பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1,500 சிசி கொண்ட டீசல் வாகனங்களுக்கு வரி 28% இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சிமெண்டிற்கான ஜிஎஸ்டி வரியும் 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார், ஏசி, டிவி மற்றும் சிமெண்ட் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.