ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம்; அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, செப்டம்பர் 22ஆம் தேதி சூரிய உதயத்துடன் “ஜிஎஸ்டி சேமிப்பு விழா” தொடங்கும் என அறிவித்தார்.இந்த மறுசீரமைப்பின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக்கப்பட்டது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டது. மாணவர்களுக்கான நோட்டு, பென்சில், கிரையான்ஸ் போன்ற கல்விப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டது.
வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி நீக்கப்பட்டதால், செலவு குறைகிறது. ஹேர் ஆயில், பற்பசை, ஷாம்பு போன்ற பராமரிப்பு பொருட்களுக்கு 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர் ஆகியவற்றுக்கும் 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது. மேலும், வெண்ணெய், நெய், பால் பொருட்கள், நொறுக்குதீனிகள், தையல் இயந்திர உதிரிபாகங்கள் அனைத்திற்கும் குறைந்த வரி விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், கார்கள், ஏசி, டிவி போன்ற உபயோகப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.மருத்துவ உபகரணங்களில் தெர்மோமீட்டர், ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருட்கள், மருத்துவக் கண்ணாடிகள் ஆகியவற்றுக்கு 12% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நேரடியாக பயன் அடைய உள்ளனர்.