பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில், நேற்று 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம், 301021.61 லட்சம் கோடி மதிப்பில், புதிய வரிகள் எதுவும் இன்றி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில நிதி அமைச்சர் கணுவாய் தேசாய், பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டார். பூபேந்திர பட்டேல் தலைமையில், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநில பட்ஜெட் கடந்த வருட பட்ஜெட்டை விட 23.38% அதிக நிதியை கொண்டுள்ளது. மேலும், மொத்த பட்ஜெட் நிதியில், 1.91 லட்சம் கோடி, மாநில வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், பாஜக தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்ற பல திட்டங்கள் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, "பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டத்தின்படி, காப்பீடு தொகை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் படி, வருடத்திற்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது" உள்ளிட்ட அறிவிப்புகள் வெளிவந்தன. மேலும், வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ், சாலைகள் அமைப்பது, பூங்காக்கள் அமைப்பது, குடிநீர் திட்டங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவது போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.