காமன்வெல்த் போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின்வாங்கியதை தொடர்ந்து குஜராத் அரசு போட்டியை அகமதாபாத்தில் நடத்த ஆர்வமாக இருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி கடைசியாக 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதேபோல் வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு 23 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி மார்ச் 17 முதல் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மகாணத்தில உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஆஸ்திரேலியா பின் வாங்கி, போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா மாகாணம் விலகியது. திட்டமிட்ட தொகையை விட செலவு அதிகமாகும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதனையடுத்து 2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான ஏற்பாடுகளை குஜராத் அரசு செய்ய உள்ளது. மேலும் 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவதற்கான உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி விடலாம் என குஜராத் அரசு தீவிரமாக உள்ளது.