ரஷ்யாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 93 பேர் பலியாகி உள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கே குரோக்கஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று உள்ளது. அங்கு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று திடீரென்று உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டது. சுற்றி இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. அந்த அரங்கிற்கு தீ வைத்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். அப்போது அந்த அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆகும். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு 70-க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு போலீசாரும் குவிக்கப்பட்டனர். மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் ஐ எஸ் கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.