இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நேற்று தொலைதூர ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
காசா போர் 8 மாதங்களாக நடைபெறுகிறது. இதில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் முதல் முறையாக காசாவில் இருந்து இஸ்ரேல் மீது தொலைதூர ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் நேற்று மேற்கொண்டது. இதில் பல ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதற்கிடையே பிரதமர் நேதன்யாகுவுக்கு இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினரிடமிருந்து விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் படைகளை காசாவில் இருந்து முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நேதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் சனி அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.