கடந்த ஜூன் 22 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, வெள்ளை மாளிகையில் அவருக்கான செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக செய்தியாளர்களை சந்திப்பது மிகவும் அரிதான நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் பெண் பத்திரிக்கையாளர் சஃப்ரீனா சித்திக்கி, "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு நிலவுவதாகவும், அரசுக்கு எதிரான விமர்சனங்களை எழுப்பபவர்களின் நாக்குகள் கட்டப்படுவதாகவும், மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, சிறுபான்மையினருக்கான சம உரிமையை நிலை நாட்ட இந்திய அரசின் நடவடிக்கை என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, " ஜனநாயக இந்தியாவில் பாகுபாடு கிடையாது" என்று பதிலளித்திருந்தார். இந்த கேள்வி பதில் நிகழ்வு பேசு பொருளானது.
இந்த நிலையில், பத்திரிக்கையாளர் சஃப்ரீனா சித்திக்கி மீது இணையம் வாயிலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பாஜகவின் தொழில்நுட்பக் குழு இதில் முக்கியமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், சப்ரீனா ஒரு பாகிஸ்தானிய பெண் எனவும், இந்திய வெறுப்பு பாகிஸ்தானியர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது எனவும், பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "ஊடக சுதந்திரம் என்பது மிகவும் அவசியம். அதன் அடிப்படையிலேயே, சப்ரினா கேள்வி எழுப்பினார். ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வகையில், ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய துன்புறுத்தல்கள் தொடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது." என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














