கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதார அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
கர்நாட சட்டசபை பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சுகாதார அமைச்சர் சுதாகர், மாநிலத்தில் கட்டாய கிராம சேவை சட்டத்தின் கீழ், 4,000 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தாலுகா மருத்துவமனைகளில், சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். பன்ட்வால் தாலுகா மருத்துவமனையில், வல்லுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதாரத்துறையில் 400 பார்மசிஸ்ட், 150 ஆய்வக வல்லுனர்கள் உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக செப்டம்பர் 7ல், ஆன்லைன் வழியாக விண்ணப்பம் கோரப்பட்டது.
சென்னராயபட்டணாவில் 13 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட தாய் -- சேய் மருத்துவமனை கட்டப்படும். பெலகாவி, ராய்பாக் பிக்கேவாடி மற்றும் பெடவாடா கிராமங்களில், புதிதாக ஆரம்ப சுகாதார மையங்கள் துவங்கப்படும் என்றார்.
மேலும், மாநிலத்தில் தற்போது 800 சுகாதார மையங்கள் உள்ளன. கல்யாண - கர்நாடகா பகுதியில் 107 சுகாதார மையங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு 100 சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார் என்று அவர் கூறினார்.














