தாய்லாந்தில், ஒரே வாரத்தில், கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் காற்று மாசு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இது உலக அரங்கில் காற்று மாசு குறித்த எச்சரிக்கை பதிவாக அமைந்துள்ளது.
உலகின் மிகப் பிரபலமான சுற்றுலா தளமாக தாய்லாந்து நாட்டின் பாங்காக் உள்ளது. இங்கு, கடந்த சில நாட்களாக, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் கலந்த முறையில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை வெளியேற்றங்கள் மற்றும் விவசாயத் துறையில் செய்யப்படும் எரியூட்டல்கள் ஆகியவற்றால் இது ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல், காற்று மாசு மிகவும் அதிகரித்து, 1.3 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை, “காற்று மாசு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம்” என எச்சரித்துள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் N95 முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














