கருவில் உள்ள குழந்தைக்கு, வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, ஏற்கனவே 3 முறை கரு கலைந்துள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவரை பரிசோதனை செய்ததில், கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதய அறுவை சிகிச்சை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவெடுத்த நிலையில், பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சையில், மகப்பேறு மற்றும் இதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் இணைந்து சாதனை புரிந்துள்ளனர்.
தாயின் அடிவயிற்றில் துளையிட்டு, குழாய் மூலம், கருவில் இருந்த குழந்தையின் இதயத்தில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 90 வினாடிகளில் இந்த சிகிச்சை நிறைவேற்றப்பட்டு, தற்போது தாயும் சிசுவும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை பிறக்கும் போது, இதய நோயின் தீவிரம் குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.














