தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் வெப்ப அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் இருக்கும் வெப்பநிலையை விட இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வெயில் அதிகப்படியாக வாட்டி வதைத்து வருகிறது.இதில் சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி எடுக்கின்றது. இதில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் மக்கள் வெளியே செல்லவே அஞ்சி வருகிறார்கள். மேலும் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர் என அவர்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு, சேலம், கரூர்,வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப அலை தாக்கம் நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.