டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குளிர்காலம் நிலவி வரும் நிலையில் டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் பரெய்லி , மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பெய்துவரும் பனியால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
பனி மூட்டத்தால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. மேலும் பல ரயில்கள் தாமதமாக சென்றன. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் கொட்டும் பனியால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இமாச்சல் மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பகுதிகள் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிகின்றன. சாலைகளில் குவிந்து கிடக்கும் பனி குவியல்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.














