இந்தியாவில், இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில், அக்டோபர் 7ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில், ஹீரோ நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் அறிமுகப்படுத்த இருப்பதாக நிறுவனத்தின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, ஹீரோ எலக்ட்ரிக் என்ற நிறுவனம், மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதனால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ‘ஹீரோ’ என்ற பெயரை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஹீரோ என்ற வணிகப் பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயரில், தற்போது புதிய மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 7ம் தேதி, இந்திய ஆட்டோமொபைல் துறையின் புதிய சகாப்தம் எழுதப்பட இருக்கிறது. அன்று நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹீரோ நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த மேம்படுத்துதல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு, சுமார் 10000 தொழில் முனைவோருக்கு, 10 கோடி அமெரிக்க டாலர் நிதியை, ஹீரோ நிறுவனம் ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பகுதியாக, புதிய மின்சார வாகனத் தயாரிப்பு அமைந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் விதமாக 'விடா' என்ற புதிய அம்சமும் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














