ஹீரோ இலக்ட்ரோ நிறுவனம், 2 புதிய மின்சார மிதிவண்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச் 3 மற்றும் எச் 5 என்ற பெயர்களில், மின்சார மிதிவண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலை முறையே 27499 மற்றும் 28499 என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச் 3 மாடல் வண்டி, கருப்பு - பச்சை மற்றும் கருப்பு - சிவப்பு நிறங்களிலும், எச் 5 மாடல் வண்டி, பச்சை மற்றும் சாம்பல் நிறங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக, மின்சார மிதிவண்டிகளை பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் இந்த வண்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மின்சார மிதிவண்டியில், அதிக திறன் வாய்ந்த கார்பன் ஸ்டீல் பிரேம் மற்றும் வாட்டர் ப்ரூப் லித்தியம் அயான் பேட்டரி ஆகியவை உள்ளன. மேலும், இதில், சார்ஜிங் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மிதிவண்டிகள் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக் அம்சங்களை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், நகர்ப்புறம் உள்ளிட்ட அனைத்து சாலை பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டியின் முக்கிய தனித்துவ அம்சமாக எல் இ டி டிஸ்ப்ளே உள்ளது. மேலும், 250 வாட்ஸ் பி எல் டி சி மோட்டார் கொண்டு இதன் பேட்டரிகள் இயக்கப்படுகின்றன.
இந்த மிதிவண்டியில் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார மிதிவண்டிகள் இணையம் வாயிலாக விற்கப்படுகின்றன. அத்துடன், டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் உள்ள நிறுவனத்தின் பிரத்தியேக கடைகளிலும் விற்கப்படுகின்றன. இதுகுறித்து பேசிய ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஆதித்யா முஞ்சால், “இந்த புதிய மின்சார மிதிவண்டிகள் மூலம் இன்றைய இளைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளோம். பிரீமியம் தரத்தில் இந்த மிதிவண்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் பயண அனுபவத்தை மாற்றும் விதமாக இந்த மிதிவண்டிகள் இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.