மின் வாரிய ஊழியர்கள் இன்று நடத்த உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தங்களின் சொந்த நலனுக்காக, மின்வாரிய ஊழியர்கள் இன்று முதல் போராட்டம் நடத்த உள்ளதாக 2022 டிச., 16ல் தொழிலாளர் சங்கங்கள், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளன. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ஊழியர்களின் கோரிக்கை குறித்து சமரச பேச்சு துவங்கி உள்ளது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது. போராட்டத்தில் ஈடுபட்டால் அத்தியாவசிய சேவை பணிகள் பாதிக்கப்படும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.