இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்து ஹோண்டா கார்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. 20 லட்சமாவது காராக, ஹோண்டா சிட்டி வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி நிலையத்தில் இந்த வாகனம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம், கடந்த 1997 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது. சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில், நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள், இந்தியாவில் இயங்கி வருகின்றன. தொடர்ந்து 25 ஆண்டுகளாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஹோண்டா நிறுவனம் உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, 2 மில்லியன் கார்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவர் டகுயா சுமுரா இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், இந்தியாவில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் வாகனங்கள் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி நிலையம் ஒரு ஆண்டுக்கு 180000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள், உலகின் 15 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.