இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, புதிய ஹோண்டா ஆக்டிவா வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவா எச் ஸ்மார்ட் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில், ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஆகிய 3 வகையறாக்களில் வெளியாகும் இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா வாகனத்தின் விலை முறையே 74536, 77036 மற்றும் 80537 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் கடுமையான புகை வெளியேற்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் மாசு வெளியேற்றத்தின் அளவை தானாகவே கண்டறியும் ஓபிடி 2 சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் சாவி அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளதால், கார்களைப் போலவே, சாவி இன்றி வாகனத்தை திறந்து, பூட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2 மீட்டர் தொலைவில் இருந்தே வாகனத்தின் எஞ்சினை ஆன் மற்றும் ஆப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பெரிய சக்கரங்கள், நீளமான கால் வைக்கும் பகுதி, எல் இ டி ஹெட் லேம்ப் போன்ற பல புதிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.














