ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில், முக்கிய பதவி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விற்பனை மற்றும் சேவைகள் பிரிவின் நிர்வாக அதிகாரியாக இருந்த தருண் கார்க், முதன்மை இயக்க அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உற்பத்தி பிரிவின் துணைத் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன், முதன்மை உற்பத்தி அலுவலராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய பதவி உயர்வுகள் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம், "புதிய பதவி பொறுப்புகளுடன் சேர்த்து, தருண் கார்க் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிறுவனத்தின் முழு நேர நிர்வாக இயக்குநர்களாக பொறுப்பு வகிப்பர். இந்த புதிய பொறுப்புகள், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளுக்கான திறன் சோதனை ஆகும்" என்று கூறியுள்ளார்.