ஐஸ்லாந்தின் வடகிழக்கில் அமைந்துள்ள கிராஃப்லா எரிமலை, உலகின் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகும். இந்த எரிமலை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள, விஞ்ஞானிகள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். வடகிழக்கு ஐஸ்லாந்தின் கிராஃப்லா எரிமலை அருகில் மாக்மா ஆராய்ச்சி திட்டமாக `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்' (KMT) எனப்படும் புதிய ஆய்வு நடைபெறவிருக்கிறது. கடந்த 1,000 ஆண்டுகளில் 30 முறை வெடித்த இந்த எரிமலை, 1980 களில் கடைசி முறையாக வெடித்தது. இந்த ஆய்வின் மூலம், எரிமலை வெடிப்பு அபாயங்களை முன்னறிவிக்கவும், புவி வெப்ப ஆற்றலை (geothermal energy) பயன்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சஹிகள் மேற்கொள்ளப்படும்.
விஞ்ஞானிகள் கிராஃப்லா எரிமலையில் இரண்டு ஆழமான துளைகளை உருவாக்க உள்ளனர். இந்த துளைகளின் மூலம் மாக்மாவை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின் மூலம், மாக்மாவின் வெப்பநிலை, அழுத்தம் மற்றும் இதர பண்புகள் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். வரும் 2027-ஆம் ஆண்டு முதல் எரிமலையில் துளையிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














