தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஃப்ரீ ஸ்டேட் மாகாணம் வெல்காம் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தின் செயல்பாடு 1990களிலேயே நிறுத்தப்பட்டது. அங்குள்ள கனிம வளங்கள் தீர்ந்துவிட்டதால், சுரங்கம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம், இந்த தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர், சுரங்கத்தில் படிந்திருக்கும் எஞ்சிய கனிம வளங்களை எடுக்க முனைந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், 31 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் 18ஆம் தேதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. சட்டவிரோதமாக சுரங்கத்திற்குள் நுழைந்த குழுவை சேர்ந்த 16 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்து, விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கொண்டு வந்தனர். மேலும், 29 பேர் தங்களுடன் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களின் நிலை தெரியவில்லை எனவும் கூறினர். வெடி விபத்து நேர்ந்த பகுதி சுரங்கத்தின் மிகவும் அபாயகரமான பகுதி என்பதால், உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. எனவே, விபத்தில் சிக்கிய அனைவரும் சுரங்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.














