உலக அளவில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் உயர்ந்து வரும் பணவீக்கம், உக்ரைன் ரஷ்யா போரினால் ஏற்பட்டுள்ள விளைவுகள், கொரோனா பொது முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் நிதி ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 5.9% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. முன்னதாக கணிக்கப்பட்ட 6.1% அளவிலிருந்து 5.9% ஆக வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்தியாவின் பணவீக்கம் 4.9% ஆக குறையும் எனவும், அடுத்த நிதியாண்டில், இது 4.4% ஆக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவாகும். மேலும், சீனாவின் வளர்ச்சி விகிதம் 5.2% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியும் தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டில் 4.5% ஆக குறையும் எனவும் தெரிவித்துள்ளது. பிற உலக நாடுகளை பொறுத்தவரை, அமெரிக்கா 1.6% , பிரான்ஸ் 0.7%, ஜெர்மனி மைனஸ் 0.1% மற்றும் பிரிட்டன் மைனஸ் 0.7% அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது.














