வங்கிக் கடன் ஆவணம், வாடகை ஒப்பந்தங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழக பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, ‘ஸ்டார்’ மென்பொருள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், குறு. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வங்கிக் கடன் பெறுவதற்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, கடனை திருப்பி செலுத்தும்போது வங்கிகள் எழுதித்தரும் ரசீது, 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்பு தொடர்பான வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான பதிவு இதுவரை நேரடியாக ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறையில் நடந்து வந்தது. இவை தற்போது இணையதள வழி பதிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்வர் கடந்த செப்.16-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், அலுவலகத்துக்கு வெளியே நடைபெறும் பத்திர உருவாக்கம், விரல்ரேகை எடுத்தல், ஆதார் வழி சரிபார்ப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துதல் முடிந்ததும், பத்திரம் பதிவுக்கு இணையதள வழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து விவரங்களும் சட்டமுறைப்படி சரியாக இருக்கும் பட்சத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கு ஏற்க இயலாத ஆவணங்கள் இருந்தால் உரிய காரணத்தை தெரிவித்து பதிவு செய்ய மறுக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார் பதிவாளர்கள் கூறுகையில், சர்வர் பிரச்சினை, உள்நுழைவில் பிரச்சினை என்று கூறி பதிவுக்கு ஆன்லைனில் அனுப்புவதை தவிர்த்து நேரடியாகவே ஆவணத்தை கொண்டு வருகின்றனர் என்றனர். பதிவுத் துறையில் இணையதளம் வழி பதிவு, பதிவு செய்த அன்றே பத்திரம் வழங்கப்படுவது போன்ற நடவடிக்கைகளால் பத்திரப் பதிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பதிவுத் துறையின் வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல்வருவாய் ஈட்டப்பட்டது.