பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சியை சேர்ந்த 80 பேரை வெளிநாட்டு பயணத் தடை பட்டியலில் பாகிஸ்தான் அரசு இணைத்துள்ளது. கடந்த மே 9, 10 ஆகிய தேதிகளில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணமாக இவர்கள் கருதப்பட்டு, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளை அந்நாட்டின் அரசு பதிவு செய்தது. இது தொடர்பாக அவர் கடந்த மே 9 ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை பாகிஸ்தானில் வன்முறையைத் தூண்டியது. ஆயிரக்கணக்கானோர் வன்முறையில் ஈடுபடத் துவங்கினர். இதனால் பதற்றம் ஏற்படவே, பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மறுநாள் இம்ரான் கான் ஜாமினில் வெளிவந்தார். மேலும், வேறு பல ஊழல் வழக்குகளிலும் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.














