தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தகவல் தொடர்பு துறை அமைச்சர் பவத் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக இம்ரான் மற்றும் பகத் சவுத்ரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட அமர்வு அவமதிப்பு வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இம்ரான் கானும் பவத் சவுத்ரியும் குற்றவாளிகள் என நேற்று இந்த அமர்வு தீர்ப்பளித்தது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணை வரும் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் இம்ரான் கானும் பவத் சவுத்ரியும் ராவல்பின்டியில் உள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த வழக்கின் விசாரணை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் பதவியை இழந்ததிலிருந்து இம்ரான் கான் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.