கடல் அரிப்பு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 15 ஹெக்டேர் நிலப்பகுதியை கோவா நகரம் இழந்துள்ளதாக இஸ்ரோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கந்தோலியம் கடற்கரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கடற்கரையில், தரைதட்டி நின்ற கப்பலை அகற்றுவதற்கு நெடுங்காலம் ஆனது. அதன் காரணமாகவே, இந்த பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவா கடற்கரை பகுதியில், சுமார் 21.7 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ள அதே வேளையில், கடற்கரையில், கடல் மண் 7 கிலோமீட்டர் வரையில் படிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவாவில் மொத்தம் உள்ள 145.6 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரையில், 116.7 கிலோமீட்டர் பகுதி, பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடியவை என்பதால், இதற்கு கவனம் செலுத்துமாறு, இஸ்ரோ, அரசை கேட்டுக் கொண்டுள்ளது.














