விண்வெளியில் உள்ள புறக்கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிய, நெடுங்காலமாக பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இதில் முக்கிய மைல் கல்லாக, பாறைகள் சூழ்ந்த புறக்கோள்களில் தண்ணீர் உள்ளதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், புறக்கோள்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகி உள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கிரகங்களின் தோற்றத்திற்கும், தண்ணீருக்கும் இடையே, மிகப்பெரிய இணைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இங்கிருந்து 370 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனைப் போலவே பிடிஎஸ் 70 என்ற நட்சத்திரம் உள்ளது. ஆனால், சூரியனை விட இளமையாகவும் சற்று குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது. இதனை சுற்றி பல பாறை சூழ்ந்த கிரகங்கள் வலம் வருகின்றன. தற்போது, இந்த மண்டலத்தில் உள்ள புறக்கோளில், 330 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஆவி வடிவில் அதிக அளவு தண்ணீர் உள்ளதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, கோள்களில் தண்ணீர் உருவான காரணம், கோள்களின் அமைப்பு, உயிர்கள் தோன்றுவதற்கான சாத்திய கூறுகள் போன்ற ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.