தமிழகத்தில் 9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது. தற்போது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை 10ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 9ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தம் 150க்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும்.
ஆண்டு இறுதி தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது அனைத்து பாட தேர்வுகளுக்கு வராவிட்டால், தக்க மருத்துவ சான்றிதழ் கொடுத்த பின் அந்த மாணவரின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, வருகைப்பதிவு 75 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.