கடந்த நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ரூ.71,955 கோடி அளவுக்கு வைப்புநிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நிதி ஆண்டில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்து ரூ.71,955 கோடி அளவுக்கு வைப்புநிதி திரட்டப்பட்டது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் அளவும் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.64,140 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. பயிர்க்கடனாக மட்டும் 17 லட்சத்து 43,874 விவசாயிகளுக்கு ரூ.13,443 கோடி கடன் வழங்கப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.1,448 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.