திருவாரூரில் 20ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பீகார் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 20ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். அதேபோல, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.