உத்தராகண்டில் பத்ரிநாத் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாத் கோயில் நேற்று காலை 7:10 மணிக்கு முழு வேத மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடன் பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பத்ரிநாத் கோயில் 15 குவின்டால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் தலைமை அர்ச்சகர் ராவல், ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.
மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பக்தர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு சார்தாம் யாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளதாகக் கூறினார். கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் திறக்கப்பட்டதை அடுத்து, உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியுள்ளது.














