வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் யூ டியூப் பிரபலங்களுக்கு எதிராக வருமானவரித்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில பிரபலங்கள் தங்கள் படைப்புகள் மூலமும், வர்த்தக பொருட்களுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார்கள். ஆனால் இவற்றை வருமானவரி கணக்கில் காட்டுவது இல்லை. வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல், வருமானம் ஈட்டினால் வரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்கட்டமாக, கேரளாவில் 10 யூ டியூப் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் நாகரிகமாக நடத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், சில முன்னணி பிரபலங்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை வருமானவரித்துறை கண்காணித்து வருவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.