உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அதிநவீன தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்த நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு நிகராக தேஜாஸ் போர் விமானங்கள் இருப்பதும் பல நாடுகளை கவர்ந்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் ஜேஎப்-17, கொரியாவின் எப்ஏ-50, ரஷ்யாவின் மிக்-35 மற்றும் யாக்-13- ஜெட் விமானங்களின் கடும் போட்டிகளுக்கு இடையில் தேஜாஸ் விமானத்தை வாங்க மலேசியா முன்வந்துள்ளது. இந்த விமானம் 2 பேர் பயணிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேஜாஸ் விமானங்கள் வாங்குவது குறித்து அர்ஜென்டினா, எகிப்து, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆண்டுக்கு 16 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் வகையில் உற்பத்தி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய விமானப்படைக்கும் வெளிநாட்டு ஆர்டர்களுக்கு ஏற்ப, ஆண்டுக்கு 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கவும் முடியும். தேஜாஸ் போர் விமானங்கள் விலையும் மற்ற நாடுகளை விட குறைவுதான். ஆனால், அதன் செயல்திறன் மேம்பட்டவை என்று அவர்கள் கூறினர்.