தமிழக அரசின் வருமானம் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்குக்கு மேல் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். கொரோனா பாதிப்பு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றல், பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் போன்றவை கொடுத்த பின்னும் ஒரே ஆண்டில் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். தமிழக அரசின் வரி வருமானம், வரி அல்லாத வருமானம் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வகையில் செலவையும் பற்றாக்குறையையும் கடனையும் வட்டியையும் குறைத்துள்ளோம். ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலவை குறைத்து உள்ளோம் என்று தியாகராஜன் கூறினார்.
மேலும், தமிழக அரசு, 2022 - 23ம் ஆண்டு, 83 ஆயிரத்து 955 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டமிடாத செலவை செய்துள்ளோம். பொது வினியோகத்துக்காக இரண்டு ஆண்டுகளாக தலா 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். மகளிர் இலவச பஸ் பயணத்துக்கு 1,500 கோடி ரூபாய் செலவழித்து உள்ளோம். இதை சமன் செய்வது நிதித் துறை வேலை ஆகும். மத்திய அரசின் ஜி.எஸ்.டி.,வருமானம், 37 சதவீதம் உயர்ந்துள்ளது; வருமான வரி 23 சதவீதம் வளர்ந்துள்ளது என்று நிதி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.