சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கொண்டாடிய விழாக்களில் முதன்மையானது "இந்திர விழா" என்பதாகும். மருத நிலத்தின் தெய்வமாக வணங்கப்பட்ட கடவுள் இந்திரன் ஆவார். அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதான இளவேனில் பருவத்தில், இந்திரனை வழபடுவதற்கு எடுக்கப்பட்ட விழா இந்திரவிழா எனப்பட்டது. மழையின் கடவுளான இந்திரனை வணங்கி, உழவுத் தொழிலுக்குத் தேவையான மழையை வேண்டிப் பெறுவதே இந்திரவிழா கொண்டாடியதன் நோக்கமாயிற்று. இந்திர விழா பற்றிய பல இலக்கியக் குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றிலிருந்து சில தகவல்கள்:
இந்திர வழிபாடு மற்றும் இந்திர விழா எடுக்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடையே நிலவிய செய்தியினைப் பற்றிய முதல் குறிப்பு இடம்பெறுவது எட்டுத்தொகை நூலான ஐங்குறுநூறில் தான். பின்னர் காப்பியங்களில் இந்திர விழா பற்றிய விரிவான தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
மணிமேகலையின் ‘விழாவறை காதை’ வாயிலாக இந்திர விழா தொடங்கிய முறையையும், விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளமையையும் அறிய முடிகின்றது. சீத்தலைச் சாத்தனார் இவ்விழாவை ஒரு சாந்திப் பெருவிழா என்று கூறுகிறார். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டு, தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும் என்பதை “தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்” எனக் கூறுகிறார். மேலும் மணிமேகலையில் இந்த விழா பற்றிய வர்ணனைகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, விழா பற்றிய உண்மைத் தகவல்கள் எது, காப்பியச் சுவைக்காக ஏற்றிக் கூறப்பட்ட செய்திகள் எது என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காலத்திற்கு இடையே கடற்கோள் ஏற்பட்டு, புகார் நகரம் அழிந்தது என்றும், இது இந்திர விழாவை மறுத்து விட்டதாலேயே நிகழ்ந்தது என்றும் அறவண அடிகள் கூறுவதாக மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படுகிறது. இதைப் பற்றிய ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்றளவிலும் தமிழர்களின் அனைத்து விழாக்களிலும் முதல் நிகழ்வாக நடப்பது, "கால்கோள்" நடப்படும் நிகழ்ச்சி ஆகும். இந்த மரபிற்கான சான்று இந்திரா விழா பற்றிய சிலப்பதிகாரப் பாடலில் கிடைக்கப்பெறுகிறது.
சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் கணுவெழுந்த பொன்மூங்கில் தண்டு நட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்பட்ட செய்தியை சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரவிழவூரெடுத்த காதை கூறுகிறது. மேலும் இதன் மூலம், இவ்விழா சித்திரை மாதம் பெளர்ணமி நாளில் நடைபெற்றிருப்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது.
இன்றைய காலகட்டத்தில், இந்த விழா ஒரு சில இடங்களில் நடைப்பெற்று வருகிறது. நாகபட்டிணம் மாவட்டம் பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) கொற்றவை பந்தலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்திரவிழா தொடங்கி, ஒரு வாரம் நடைபெறும். கடந்த சில வருடங்களாக இவ்விழா, சுருக்கமாக, மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்த மூன்று நாட்களுக்குப் பட்டிமன்றம், பாட்டுமன்றம், இலக்கியச் சொற்பொழிவு, சிலப்பதிகார நாடகம் ஆகியவை நடைபெறுவதுண்டு. சுற்றுலாத் துறையினர் இதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை நாட்டின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெறும் 15ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழாவையே இந்திர விழாவாக ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமி அன்று காலங்காலமாக கொண்டாடி வருகிறார்கள்.