உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள சர்வதேச பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 129 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆண் பெண் விகிதாச்சாரம் மற்றும் பாலின சமன்பாடு ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில், உலக பொருளாதார மன்றம் பாலின இடைவெளி குறியீட்டை வழங்கி வருகிறது. இந்த முறை, தெற்காசியாவை பொறுத்தவரை, வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் பூட்டான் நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இறுதியாக உள்ளது. உலக அளவில், மொத்தம் 146 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், சூடான் 146, பாகிஸ்தான் 145 ஆகிய இடங்களில் உள்ளன. அரசியல் ரீதியாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் இந்தியா 65 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும், கல்வியிலும் பெண்களுக்கு சிறந்த பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, “கடந்த 4 ஆண்டுகளாக, 68.5% விகிதத்தில் சர்வதேச பாலின இடைவெளி உள்ளது. முழுமையான பாலின சமன்பாடு ஏற்படுவதற்கு 134 ஆண்டுகள் ஆகும்” என்று உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.