இந்தியாவின் வாகனத்துறை, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக உயர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில், 7.5 லட்சம் கோடியாக உள்ள இந்திய வாகனத் துறையின் வளர்ச்சி, 2024 ல் 15 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அடுத்த ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார்.
“உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமாக மாற்றி, எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், பெரும்பாலான வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், பயோ சிஎன்ஜி, பயோ எத்தனால், பயோ எல்என்ஜி உள்ளிட்ட மாற்று எரிசக்தியில் இயக்கப்படும். மேலும், கட்டுமானங்களில் ஸ்டீல், சிமெண்ட் பயன்பாடு குறைக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும். இதனால் செலவுகள் பல மடங்கு குறைக்கப்படும்” என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.