இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது வரலாற்றில், அதிகபட்ச இழப்பை தற்சமயத்தில் சந்தித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் இழப்பு 137.58 கோடியாக பதிவாகி உள்ளது.
மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால், இந்த இழப்பு நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு டன் நிலக்கரி விலை 60 டாலர்களில் இருந்து 300 டாலர்களாக உயர்ந்துள்ளது. இது உற்பத்திச் செலவை நேரடியாக பாதித்துள்ளது. மேலும், இது தொடர்பான இதரச் செலவுகள் 2100 டாலர்களில் இருந்து 3600 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே இழப்பு நேர்ந்து உள்ளது என நிறுவனத்தின் துணைவேந்தர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உற்பத்திச் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாது என்பதால், நிறுவனம் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரலாற்று இழப்பு பதிவாகியுள்ள அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 5% உயர்ந்து, 1255 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.