இந்தியா-சீனா உறவு நாட்டின் 'எல்லையோர நிலையை' பொறுத்தது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள பல பகுதிகளில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளன. உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தையின் விளைவாக இரு தரப்பினரும் பிராந்தியத்தில் பல பகுதிகளில் பிரிந்து சென்றாலும், எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'ஆசிய சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்' துவக்க விழாவில் பேசினார். அப்போது அவர் 'ஆசியாவின் எதிர்காலத்தின் பெரும்பகுதி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பொறுத்தது, என்று கூறினார்.
மேலும் அவர் , 'இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். பிராந்தியத்தை பாதிக்கும் முன்முயற்சிகள் ஆலோசனையாக இருக்க வேண்டும், ஒருதலைப்பட்சமாக இருக்க கூடாது.
உறவுகள் நேர்மறையான பாதைக்குத் திரும்புவதற்கும் நிலையானதாக இருப்பதற்கும், மூன்று பரஸ்பரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை பரஸ்பர உணர்திறன், பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர ஆர்வம். சீனாவின் தற்போதைய நிலை அனைவருக்கும் நன்கு தெரியும். நாட்டு எல்லையின் நிலைதான் உறவின் நிலையைத் தீர்மானிக்கும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.