கடந்த 2021-22 ஆண்டில், 1320 பில்லியன் யூனிட்டுக்களாக இருந்த இந்தியாவின் வருடாந்திர மின் தேவை, 2027 மார்ச் மாதத்தில், 1874 பில்லியன் யூனிட்டுக்களாக அதிகரிக்கும் என்று மத்திய மின்சார ஆணையம் (CEA) தெரிவித்துள்ளது. மேலும், சராசரியாக ஒரு வருடத்திற்கு 7.2% மின் தேவை அதிகரிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளது. நடப்பு 2022 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த ஐந்தாண்டு காலத்தில், இந்தியாவின் மின் தேவை 4% அதிகரித்திருந்தது. தற்போது, அடுத்த 5 ஆண்டுகளில், இது 7.2% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1653 கிகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவில் புதிதாக அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி சார்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக, 92.6 கிகாவாட் மின்சாரம், சூரிய மின் சக்தி நிலையங்கள் மூலமாகவும், 25 கிகாவாட் காற்றாலைகள் மூலமாகவும், 25.8 கிகாவாட் நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலமாகவும், 7 கிகாவாட் அணு மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும் பெறப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன், நிலக்கரி மூலம் இயங்கும்,11 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் 4.62 கிகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. எனினும், இந்தியாவின் முதன்மை மின் உற்பத்தி, நிலக்கரி சார்ந்ததாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மின் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரி அளவு 3.8% அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.
மேலும், “உலகில், பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனாலும், இந்தியாவின் உமிழ்வு விகிதம் மேற்கத்திய நாடுகளை விட பன்மடங்கு குறைவாகும். அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.