இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா உதவியது. பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்டவற்றை அனுப்பியது. மேலும் இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளது.
இந்த கடன் தொகையை சர்வதேச நாணயநிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும். இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.