அமெரிக்க இன்ஜினுடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானம் 2025-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என ஏரோனாடிக்கல் மேம்பாட்டு முகமையின் இயக்குநர் பிரபுல்லா சந்திரன் தெரிவித்தார்.
இந்திய விமானப்படைக்கு தேவையான இலகு ரக போர் விமானத்தை(எல்சிஏ) தேஜஸ் என்ற பெயரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம்(எச்ஏஎல்) தயாரிக்கிறது. ஏற்கெனவே தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்படுகின்றன. இதன் வடிவம் தேஜஸ் மார்க் 1 ரகத்தைவிட 20 சதவீதம் பெரியது.
இதற்கு தேவையான இன்ஜினை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனம் கடந்த 22-ம் தேதி கையெழுத்திட்டது. இன்னும் 18 மாதங்களில், தேஜஸ் மார்க் 2 ரக முதல் விமானம் தயாராகிவிடும் என பிரபுல்லா சந்திரன் கூறியுள்ளார். தேஜஸ் மார்க் 2 ரக விமானத்தின் 90 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.