இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு செயலாளர் பிரபாத் குமார், “இந்தியா, பசுமை ஹைட்ரஜனை முதன்மை எரிசக்தியாக கருத உள்ளது. வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், சுமார் 25 மில்லியன் டன்கள் அளவில், வருடாந்திர பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இருக்கும் என்று நம்பப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், “கார்பன் உமிழ்வை குறைக்கும் பொருட்டு, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா களமிறங்கி உள்ளது. இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்கள் இந்த துறையில் செயல்படத் துவங்கி உள்ளன. எனவே, எதிர்காலத்தில், இந்தியா ‘உலகின் எரிசக்தி மையமாக’ திகழும் என்று நம்பப்படுகிறது. அத்தகைய சூழலில், நீரிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்து, பசுமை முறையில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்” என்று கூறினார். தற்போதைய நிலையில், தேசத்தின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி குறைந்த அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.