அரபிக்கடல் பகுதியில், இந்திய போர்க்கப்பல்களான ஐ என் எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐ என் எஸ் விக்ராந்த் ஆகிய போர்க்கப்பல்கள், கூட்டாக இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த கப்பல்கள் உடன், 35க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கடற்படைக்கு இது மிக முக்கிய சாதனை ஆகும். உலகில் வெகு சில நாடுகளே ஒன்றுக்கும் மேற்பட்ட விமானத் தாங்கி கப்பல்களை இயக்குகின்றன. அந்த வகையில், 2 விமானத் தாங்கி கப்பல்கள் உடன் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. இது இந்திய கடற்படையின் வலிமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.