உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 142.86 கோடி மக்கள் தொகையுடன், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என சொல்லப்பட்டுள்ளது. ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் இந்தியா ஈடுபடவில்லை. எனவே, அதிகாரப்பூர்வமாக, இந்தியாவின் மக்கள் தொகை குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
2021 ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 68% மக்கள் தொகை 15 முதல் 64 வயது உடையவர்களாக சொல்லப்பட்டுள்ளனர். மேலும், 7% மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக சொல்லப்பட்டுள்ளனர். அதே வேளையில், சீனாவில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.