தொடர்ந்து உயர்ந்து வந்த இந்திய பங்குச் சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 1 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 414.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஹாங்காங், ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, உலக அளவில் 5வது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் பங்குச்சந்தை முதலீடுகள் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது. இந்த சூழலிலும் 5 ட்ரில்லியன் இலக்கு தொடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.